பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1978 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பும், டெல்லி பல்கலைக் கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதுகலை பட்டப் படிப்பும் படித்தார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் 1978-ம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டு படித்த அனைத்து மாணவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்த விவரங்களை வழங்கலாம் என மத்திய தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பில், மோடியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் பொது தகவல் அதிகாரிகள் வழங்குமாறு உத்தரவிட்ட மத்திய தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவை நீதிபதி பீரன் வைஷ்ணவ் ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பிரதமர் மோடியின் சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையில், "குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு குறித்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே அவர் பெற்ற பட்டப் படிப்பு சான்றிதழ் உண்மையானதாக இருந்தால், அதை மறைக்கக் கூடாது. உண்மையாகவே பட்டப்படிப்பு முடித்திருந்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வெளியிடுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. ஒருவேளை பிரதமரின் கல்விச் சான்றிதழ் போலியானதாக இருக்கலாம் எனவேதான் அதனை வெளியிடாமல் உள்ளனர். குஜராத் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி படித்திருக்கும் பட்சத்தில், அந்த பல்கலைக்கழகம் அதனைக் கொண்டாட வேண்டும். அதனை மறைக்கக் கூடாது" என்று கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம் பி சஞ்சய் சிங், "பிரதமரின் போலியான கல்விச் சான்றிதழை உண்மை என நிரூபிக்க முயற்சி நடைபெறுகிறது' என்று கூறி இருந்தார்.
இந்த கருத்து குறித்து இவர்கள் இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் பியூஷ் படேல் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பல்கலைக் கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் உள்நோக்கத்துடன் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எனவே அவர்களது கருத்துக்கள் பல்கலைக்கழகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது" எனத் தெரிவித்து இருந்தார். இதனை கேட்ட நீதிபதி வரும் மே 23ல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்.