உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதோடு, வன்முறை தொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தநிலையில், ஹரியானா மாநிலத்தில் பாஜக எம்.பி.யின் கார் மோதி விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளதாக அம்மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவிற்கு அருகே நரைங்கர் பகுதியில் உள்ள சைனி பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க குருஷேத்ரா தொகுதி எம்.பி. நயாப் சைனி, ஹரியானா மாநில அமைச்சர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சைனி பவனுக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில், நிகழ்ச்சி முடிந்து பாஜக தலைவர்கள் வெளியேறியபோது எம்.பி. நயாப் சைனியின் கார் சில விவசாயிகள் மீது மோதியதாகவும், அதில் ஒரு விவசாயி காயமடைந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியுள்ளனர். எம்.பி. நயாப் சைனியின் கார் மோதியதில் காயமடைந்ததாக கூறப்படும் விவசாயி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.பி. நயாப் சைனி மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.