Skip to main content

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்