பவன்குமார் என்ற 23 வயதுமிக்க அந்த இளைஞருக்கு ஒருவழியாக திருமணம் நடந்துவிட்டது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து தனக்குப் பிடித்தமான பெண்ணை மணமுடித்திருக்கிறார் அவர். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பவன்குமாரின் மூலமாக திருமணத்தைப் பார்த்திருக்கிறது அந்தக் கிராமம். 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு திருமணம் நடப்பதற்கான சூழலே இல்லாமல் போனநிலையில், ஒருவழியாக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ளது ராஜ்காட் கிராமம். அடிப்படையில் மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கு, சுமார் 350 பேர் வசித்து வருகின்றனர். சம்பல் ஆற்றங்கரையில் இருக்கும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளான சாலைகள், மின்வசதி மற்றும் குடிநீர் விநியோகம் என்ற எதுவுமே கிடையாது. இரவானதும் இருளுக்குள் மூழ்கிவிடும் நிலையில்தான் இப்போதுவரை காலத்தைக் கழித்துள்ளனர் ராஜ்காட் கிராம மக்கள். கிராமத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் சம்பல் ஆறும் மாசடைந்துபோன நிலையில், குடிநீர்ப் பஞ்சமும் தலைவிரித்தாடியுள்ளது. இத்தனை பிரச்சனைகளும் நிலவும் சூழலில், சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கே பெண் தர பெற்றோர்கள் தயங்கும் கொடுமையும் நீடித்திருக்கிறது.
இந்நிலையில்தான், தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் அஷ்வானி பரஷார் என்பவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். பிரதமர் அலுவலகத்திற்கு இதுதொடர்பாக கடிதம் எழுதிய அவர், #SaveRajghat என்ற சமூக வலைத்தளப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். இதன்விளைவாக ராஜ்காட் கிராமம் மீட்கப்பட்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த திருமணத்திற்கும் விடிவுகாலம் பிறந்திருக்கிறது.