Skip to main content

உண்மை தொண்டர்கள் என யாரை குறிப்பிடுகிறார் சசிகலா..! -கே.சி.பழனிசாமி கேள்வி!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

ஜெயலலிதாவின் 73- வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் பேசிய சசிகலா, "உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு, ஜெயலலிதா நம்மிடம் சொல்லிவிட்டுச் சென்ற, ‘மீண்டும் தமிழகத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும்’ என்று கூறிச் சென்றுள்ளார். அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள், ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும். அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள்; நிச்சயமாக இதைச் செய்வீர்கள், நானும் உங்களுக்குத் துணை நிற்பேன் என்பதை அன்போடு தெரிவித்து நன்றி கூறுகிறேன்" என்றார்.

 

இதுதொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''அம்மாவின் தொண்டர்கள் என சசிகலா பேசியிருக்கிறார். அதிமுகவில் இருப்பவர்களும் அம்மாவின் தொண்டர்கள் என்றுதான் சொல்கிறார்கள். அமமுகவில் இருப்பவர்களும் அம்மாவின் தொண்டர்கள் என்றுதான் சொல்கிறார்கள். இன்று சசிகலாவை சுற்றி நின்றவர்கள் அனைவரும் அமமுகவைச் சேர்ந்தவர்கள். அதிமுக தொண்டர்களை அமமுகவிற்கு வாருங்கள் என்று அழைக்கிறாரா? இல்லை அமமுகவில் உள்ள தொண்டர்கள் இன்னும் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லை ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும் என்று சொல்கிறாரா? என்பது தெளிவாக இல்லை. 

 

அதிமுக தொண்டர்கள் ஒன்றாக இணைந்து தேர்தலில் பணியாற்றி வெற்றி பெறுவோம் என்று அவர் தெளிவாகச் சொல்லவில்லை. அதனால்தான் இந்த சந்தேகம் எழுகிறது. சசிகலாவை கட்சியில் சேர்க்க முடியாது என்று இ.பி.எஸ். சொல்கிறார். ஆனால் ஒன்றுப்பட்ட அதிமுக இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும். இதுதான் கள நிலவரம். ஒன்றுபட வேண்டும் என்றால் அதற்கான சக்தி இன்று யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்