Skip to main content

விழாவுக்கு வந்துவிட்டு விலகிய எடப்பாடி! 

Published on 23/03/2018 | Edited on 23/03/2018


 

​​​​aiadmk office

 



அம்மா கல்வியகம் என்கிற  அமைப்பை நடத்தி வருகிறார் அதிமுகவை சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதன். இந்த அமைப்பின் சார்பில் , நீட் தொடர்பான புத்தக கையேடு வெளியீட்டு விழா இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புத்தக கையேட்டினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 12 மணிக்கு துவங்குவதாக இருந்த விழாவுக்கு மதியம் 1 .10-க்கு வந்தார் எடப்பாடி. 
 

ஆனால், அதற்கு முன்னதாக துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆஜராகியிருந்தனர். விழாவுக்கு தாமதமாக எடப்பாடி வந்தபோதும் உடனடியாக நிகழ்ச்சித் துவங்கவில்லை. பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்களிடம் விவாதித்த எடப்பாடி,  " புத்தக கையேட்டினை நாம் வெளியிட வேண்டாம். கே.பி.முனுசாமி வெளியிடட்டும்" என சொல்லி, அதற்கான காரணங்களை விவரித்துள்ளார். 
 

அதனை எல்லோரும் ஆமோதித்த நிலையில்,  நீட் தொடர்பான கையேட்டினை வெளியிட்டார் முனுசாமி. வெளியீட்டு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் இடம்பெறாமல் ஒதுங்கிக்கொண்டார் முதல்வர் எடப்பாடி!  "ஏன், இந்த திடீர் முடிவு? " என நாம் அதிமுகவின் மேல்மட்டத்தில் விசாரித்தபோது, " நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி அரசு எடுத்திருக்கிறது. மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறது. 

 

aiadmk office 01.jpg


 

இப்படிப்பட்ட சூழலில், நீட் தொடர்பான கையேட்டினை முதல்வரே வெளியிட்டால் , நீட் தேர்வை எடப்பாடி அரசு  ஏற்றுக்கொண்டது போன்ற விமர்சனத்தை மாணவர்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் கிளப்புவார்கள்  என எடப்பாடியிடம் அதிகாரிகள் சிலர் சொல்லியுள்ளனர். அப்போதுதான் எடப்பாடிக்கே புரிந்திருக்கிறது.  முதல்வரிடம் இது தொடர்பாக அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்ததால்தான் விழாவுக்கு வர தாமதமானது.  
 

நீட் கையேட்டை வெளியிடுவதில் இப்படிப்பட்ட எதிர்மறை சிக்கல் இருக்கிறது என்பதை அறிந்ததால்  தான் நிகழ்ச்சியிலிருந்து விலகி நின்றார் எடப்பாடி. இதையும்தாண்டி எதிர்மறை விமர்சனம் வந்தால், ' அது கட்சி நிகழ்ச்சி ; அரசுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை ' என சொல்லிக்கொள்ளலாம்  என முடிவு செய்தே விழாவிலிருந்து விலகி நின்றுவிட்டார் முதல்வர் எடப்பாடி " என்று சுட்டிக்காடுகிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் மார்ட்டின் கேஷியர் பழனிச்சாமியின் உடல் மறு பிரேத பரிசோதனை

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

 

லாட்டரி அதிபர் மார்ட்டின்  நிறுவன கேஷியர் பழனிச்சாமியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. 

 

p

 

கோவை மாவட்டம் உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி,  லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில், கேஷியராக பணியாற்றி வந்தார். மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, பழனிசாமியிடமும் விசாரணை நடந்தது.  இதன் பின்னர்  காரமடை, வெள்ளியங்காடு அருகேயுள்ள குளத்தில், பழனிசாமி பிணமாகக் கிடந்தார்.  பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 

p

 

பழனிச்சாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காரமடை போலீசில் பழனிசாமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.  மேலும்,  ‘’மார்ட்டின் நிறுவன வளாகத்திற்குள், என் தந்தையை சித்ரவதை செய்து, கொலை செய்துள்ளனர். உடலை, தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் வீசியுள்ளனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும். பிரேத பரிசோதனையின் போது, நாங்கள் தேர்வு செய்யும் டாக்டர் இருக்க வேண்டும்’’என்று உயர் நீதிமன்றத்தில் பழனிசாமியின் மகன் ரோகிண் குமார் மனு தாக்கல் செய்தார்.

 

m

 

மனுவை விசாரித்த, நீதிபதிகள்,   இது குறித்து விசாரணை நடத்த, மாஜிஸ்திரேட் ஒருவரை நியமிக்கும்படி, கோவை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்படுகிறது. விசாரணையின் போது, மனுதாரர் அல்லது அவரது வழக்கறிஞர், மாஜிஸ்திரேட்டிடம் முறையிடலாம்.  மறுபிரேத பரிசோதனை குறித்தும், மாஜிஸ்திரேட் முடிவு எடுக்கலாம். அவ்வாறு முடிவெடுத்தால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அடிப்படையில், டாக்டர்கள் குழுவை நியமிக்கலாம். மனுதாரர் தரப்பில் தெரிவிக்கும், டாக்டரையும், குழுவில் சேர்க்க வேண்டும். அந்த டாக்டர், அரசு டாக்டராக இருக்க வேண்டும். இறந்தவரின் உடலை பார்க்க, அவரது குடும்பத்தினரை, போலீசார் அனுமதிக்க வேண்டும். விசாரணைக்கு பின், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம், சீலிட்ட உறையில் அறிக்கை அளிக்க வேண்டும். அதை, புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

இந்த உத்தரவு கடிதம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு கிடைத்தது. அதன்பேரில் மார்ட்டின் நிறுவன அதிகாரி பழனிச்சாமியின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த கோவை 8-ம் எண் மாஜிஸ்திரேட்டு ராமதாஸை நியமித்து நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் விரைவில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

 

இதற்கிடையில் பழனிச்சாமியின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,  பழனிச்சாமியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. 

 

சோதனையின் முடிவுகள் வந்த பின்னர் பழனிச்சாமியின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.