Skip to main content

1000 ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் வரை! ஒபிஎஸ்சின் தீபாவளி பட்டுவாடா!!

Published on 02/11/2018 | Edited on 03/11/2018
panneerselvam

 

தேனி மாவட்டம் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த மாவட்டம் என்பதால் வருடம்தோறும் தீபாவளி செலவுக்காக  கட்சி பொறுப்பாளர்களுக்கு ஒபிஎஸ்  பணம் பட்டுவாடா செய்வது வழக்கம். அதுபோல்  இந்த தீபாவளிக்கும் மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களை, கடந்த 1ம்தேதி கைலாசம் பட்டி அருகே உள்ள ஒபிஎஸ் சின்ன பண்ணை தோட்டத்திற்கு வர சொன்னார். அதன்படி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இருக்கக்கூடிய ஆறு நகரம், எட்டு ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி செயலாளரார்கள், கிளை பொறுப்பாளர்கள் என மாவட்டத்தில் பொறுப்பில் இருக்கும் அனைத்து ர.ர.க்களும் பெரும் திரளாகவே பண்ணை வீட்டுக்கு படையெடுத்து வந்தனர்.


இப்படி வந்த கட்சி பொறுப்பாளர்களுக்கு பதவிக்கு தகுந்த மாதிரி  தீபாவளி செலவுக்கு ஒபிஎஸ் பணம் பட்டுவாடா செய்து இருக்கிறார். அதாவது நகர செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்களுக்கு தலைக்கு 50ஆயிரம் வீதம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அதுபோல் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு தலா 20 ஆயிரமும், சார்பு அணி நிர்வாகிகளுக்கு தலா 10ஆயிரமும், ஊராட்சி நிர்வாகிகளுக்கு தலா 3 ஆயிரம், மற்றும் ஒன்றிய, நகர கிளை பொறுப்பாளர்களுக்கு தலா ஆயிரம் வீதம் இப்படி  தீபாவளிக்கு கட்சி பொறுப்பாளர்களின் செலவுக்கு  ஒபிஎஸ்  பணம் பட்டுவாடா செய்து இருக்கிறார்.


ஏற்கனவே மாவட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையனோ எடப்பாடி ஆதரவாளர் என தனிச்சையாக செயல்பட்டு வருகிறார். அதோடு திடீர், திடீரென மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை உருவாக்கி கொண்டு ஒபிஎஸ் படத்தைக்கூட போடாமல் புறக்கணித்து வருகிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜக்கையனையும், ஒபிஎஸ் பண்ணை வீட்டு தோட்டத்திற்கு வர சொல்லிதான் மாவட்டத்திலிருந்து வந்த கட்சி பொறுப்பாளர்களுக்கு ஒபிஎஸ் தீபாவளிக்கு பணம் பட்டுவாடா செய்து இருக்கிறார்.
 

 

 

சார்ந்த செய்திகள்