Skip to main content

மகாராஷ்டிரா மாநில இளம்பெண்ணின் தந்தை மரணம்!  உடனடியாக உதவிக்கரம் நீட்டிய திமுக மகளிரணி!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

dmk


திமுக மகளிரணி மாநிலத் தலைவரும், திமுக நாடாளுமன்றக் குழு துணைத்தலைவருமான கனிமொழியை, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா, கடந்த  28- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார்.
 

மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் யுவாந்தி அணில் சாகேத், சென்னையிலுள்ள அஸ்சன்ட்சர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவருடைய தந்தை மாரடைப்பில் இறந்துவிட்டதாகவும், அவரை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
 

யுவாந்தி அணில் சாகேத் பணிபுரியும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு கனிமொழி தரப்பில் பேசியபோது, அப்பெண்ணோடு யாராவது ஒருவர் உடன் சென்றால், அனுப்பி வைக்கிறோம் எனப் பதிலளித்தார்கள். இது குறித்த நடவடிக்கையில் தீவிரம் காட்டினார் கனிமொழி. அந்த இளம் பெண்ணை மகாராஷ்டராவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
 

இந்தச் செய்தியைத் திமுக மகளிரணி சமூக வலைத்தளக்குழுவில் பகிர்ந்திருந்தார் கனிமொழி. இதைப் பார்த்தச் சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதி திமுக மகளிரணி அமைப்பாளர் ந.கலைச்செல்வியும், காஞ்சிபுரம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி மகள் பொன்மணியும், தந்தையை இழந்து நிற்கும் இளம் பெண்ணோடு மகாராஷ்டிரா சென்று, அவர்கள் இல்லத்தில்  சேர்த்துவிட்டுத் திரும்ப இருவரும் முன் வந்தனர்.
 

பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஊருக்குச் செல்வதற்கான அனுமதிக்கடிதம் 28 -ஆம் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு பெறப்பட்டது. அந்தப் பெண்ணோடு திமுக மகளிரணி நிர்வாகிகள் இருவருமாக, மூன்று பெண்களும் செல்வதற்கு முறையான அனுமதியை இரவு 11 மணிக்குப் பெற்று, அன்றைய தினம் இரவு 2 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். 
 

நீண்ட பயணத்திற்குப் பிறகு, மறுநாள் 29 புதன்கிழமை இரவு 11.40 க்கு மூன்று பெண்களும் மகாராஷ்டிராவுக்குப் போய்ச் சேர்ந்தனர். அந்தப் பெண்ணை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு மகளிரணி நிர்வாகிகள் இருவரும், மறுநாள் 30 - ஆம் தேதி வியாழன் மாலை 6 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தனர். 
 

2,400 கிலோமீட்டர் பயணித்து, உடனிருந்து உதவிய மகளிரணியினரைக் கனிமொழி பாராட்டினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும், மகாராஷ்டிரா எம்.பி. சுப்ரியாவும், கனிமொழியின் உடனடி தலையீட்டிற்கும், மகளிரணியினருக்கும் நன்றி தெரிவித்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்