Skip to main content

பொருளாதார நெருக்கடியால் கட்சி அலுவலகத்தை வாடகைக்கு விடும் சி.பி.எம்!

Published on 11/02/2018 | Edited on 11/02/2018

CPM

 

பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை வாடகைக்கு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

 

மேற்கு வங்கம் மாநிலம் பூர்பா பர்தாமான் மாவட்டத்தில் உள்ளது குஸ்கரா நகரம். இங்குள்ள சி.பி.எம். கட்சி அலுவலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியை ரூ.15,000க்கு வாடகைக்கு விட மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

 

அந்தப் பகுதியின் கமிட்டி செயலாளர் நாராயண் சந்திர கோஷ், ‘கட்சி அலுவலகத்தை மாதம் ரூ.15ஆயிரம் வாடகைக்குவிட முடிவு செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார். 2011 மற்றும் 2016ஆம் ஆண்டில் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்ததால், 34 ஆண்டுகால அசைக்கமுடியாத ஆட்சியைச் செய்த சி.பி.எம். கட்சிக்கு இந்த நிலை வந்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேற்கு வங்கம் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில் கொடிகட்டிப் பறந்த சி.பி.எம். கட்சியின் கோட்டையாக இருந்தது பூர்பா பர்தாமான்ம் மாவட்டம். ஆனால், தற்போது அந்தத் தொகுதியில் 15 எம்.எல்.ஏ.க்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஒரேயொரு சி.பி.எம். எம்.எல்.ஏ. மட்டுமே அங்கு உள்ளார்.

 

சி.பி.எம். கட்சியின் இந்த நிலை குறித்து பிற கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பூர்பா பர்தாமான் மாவட்டத்தின் பாஜக மாவட்டச் செயலாளர் சந்தீப் நந்தி, 'சி.பி.எம். கட்சியையே ஒருநாள் இழுத்து மூடுவதற்கான நேரம் வரும்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

" பொக்கே கொடுத்தபோதே நிலைமையைப் புரிந்துகொண்ட எடப்பாடி ; ஒரே ஒரு அறிக்கை 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து..." - புதுமடம் ஹலீம்

Published on 15/11/2022 | Edited on 16/11/2022

 

ரதக

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து இருந்தன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அதிமுக கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் சரியாக வாதாடாமல் விட்டதாலேயே இந்த முடிவு கிடைத்திருப்பதாக  திமுக மீது குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில்  இதுதொடர்பாக புதுமடம் ஹலீமிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " முதலில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் உங்களுடைய ஸ்டேண்ட் என்ன, இதை ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா என்பதைத் தெளிவாகக் கூறுங்கள். 2006ல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே இதைக் கொண்டு வந்ததாக பாஜகவினர் கூறுகிறார்கள். அப்போதே இதைக் கொண்டு வந்திருந்தால் அப்போதே திமுக எதிர்த்திருக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இப்போது என்ன நிலைப்பாடு என்று அவர்களிடம் கேட்டால் அதற்கு உரிய பதிலைச் சொல்லாமல் தேவையில்லாத கேள்விகளை எழுப்பி பதில் சொல்வதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். 

 

ஆதரவா இல்லையா என்பதைக் கூற ஏன் இவ்வளவு தயக்கம். மக்களிடம் வாக்கு கேட்டுப் போக முடியாது என்ற அச்சம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தாலேயே இவ்வளவு தயங்குகிறார்கள். 2019ம் ஆண்டு இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் வந்தபோது இந்தச் சட்டத்தை அவர்கள் ஆதரித்தார்கள். இந்த ஆதரவை நேரடியாக வழங்காமல் வெளிநடப்பு செய்து தங்களின் ஆதரவைக் காட்டினார்கள். ஜெயக்குமார் இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எதுவுமே உண்மை இல்லை. ஏனோ தானோ என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, தவறான தகவலின் மொத்த பிறப்பிடமாக இவரின் பேச்சுக்கள் இருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கும்போது இவ்வாறான எந்த சட்டத்திற்கும் யாரும் ஒப்புதல் கொடுக்கவில்லை.

 

அப்போது வெளிநடப்பு செய்து அதிமுக எதிர்ப்பு தெரிவித்தோம் என்று ஜெயக்குமார் தெரிவிக்கிறார். அவருக்குத் துணிவிருந்தால் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்று எடப்பாடியை அவர் அறிக்கை கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். இவர்களுக்குள் இருக்கும் சண்டையை மறைக்க ஏதோ ஒன்றை வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். மோடி தமிழகம் வந்தபோது எடப்பாடி பொக்கே கொடுக்கிறார். பிரதமர் மோடி பன்னீர்செல்வத்தை அருகில் அழைத்து வாங்கிக் கொள்கிறார். அப்போதே எடப்பாடி முகம் சுருங்கிவிட்டது. இதை அனைத்தையும் மறைக்கும் வேலைகளில் ஈடுபடும் இவர்கள் காங்கிரஸ் திமுக என்று பிரச்சனைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். 

 

இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாக்கு அரசியல் பண்ண நினைக்கும் பாஜகவோ அல்லது அடிமைகளாக இருக்கும் அதிமுகவோ மக்கள் நலனில் சிறிதும் கவலைப்படப் போவதில்லை என்பது இந்த இட ஒதுக்கீட்டு முறையிலேயே தெரிந்து விட்டது. பாஜகவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த அவர்களால் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அதனால் வாய் மூடி மவுனியாக திமுக மீது பழி சுமத்தப் பார்க்கிறார்கள். இவர்களின் பொய்யை யாரும் நம்பத் தயாராக இல்லை. மக்களைப் பற்றிச் சிந்திக்காவிட்டாலும் கூட மக்களைக் கஷ்டப்படுத்த பாஜகவுக்கு அதிமுக துணைபோகக் கூடாது. இது அவர்களை எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கும்" என்றார்.

 

 

Next Story

மொபைல் ஃபோன் வாங்க பத்தாயிரம் தரும் மம்தா!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

mamta banerjee

 

கரோனா தொற்றுப் பரவலால், இந்தியா முழுவதுமுள்ள பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இந்தநிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வியைப் பெற உதவும் வகையில், அவர்களுக்கு நவீன மொபைல் ஃபோன்கள் வாங்க, பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.5 லட்சம் மாணவர்களுக்கு, ரூபாய் 10,000 ஆயிரம் வழங்கப்படும் எனவும், மூன்று வாரத்திற்குள் மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.