Skip to main content

டோலிவுட்டில் களம் இறங்கிய தனுஷ் - ‘வாத்தி’ விமர்சனம்!

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

 

Vaathi movie Review

 

தமிழ் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் என ஒரு ரவுண்டு வந்து அதில் வெற்றிக் கொடி நாட்டி புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் தனுஷ் இந்த முறை களம் இறங்கி இருக்கும் இடம் டோலிவுட். வாத்தி படம் மூலம் தெலுங்கு மக்களை மகிழ்வூட்ட நேரடி தெலுங்கு படத்தில் நடித்திருக்கும் தனுஷ். மற்ற மாநிலங்களில் கிடைத்த அதே வரவேற்பை தெலுங்கு உலகிலும் பெற்றாரா? இல்லையா?

 

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தனியாக கோச்சிங் சென்டர் ஒரு பக்கம் பெருகி வர, இன்னொரு பக்கம் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கி அவையும் மக்கள் ஆதரவோடு பெருகி வர, இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும்  வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனை சரி கட்டி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பள்ளிகளில் இருக்கும் தரமற்ற ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகிறது. அப்படி தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் இருக்கும் சோழவரம் என்ற கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு ஒப்பந்த ஆசிரியராகச் செல்கிறார் தனுஷ். போன இடத்தில் தன்னுடைய வகுப்பை நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற வைத்தால் தனக்கு ப்ரமோஷன் தருவதாக கல்வித் தந்தை, கல்வி தாளாளர் என பன்முகம் கொண்ட கல்வி உலகின் மாஃபியா சமுத்திரகனி வாக்குறுதி அளிக்கிறார்.

 

இதனை அடுத்து தனுஷ் தன்னுடைய மாணவர்களை நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற வைக்கிறார். இவரின் இந்த செயலைக் கண்டு அச்சமடையும் தாளாளர் சமுத்திரகனி எங்கே அரசுப் பள்ளிகளின் தரம் இதுபோல் உயர்ந்தால் நம் தொழில் கெட்டுவிடுமோ என்று எண்ணிய அவர் தனுஷின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தன் செல்வாக்கால் தடுக்கிறார். இதனை எதிர்க்கும் தனுஷ் தனது பள்ளி மாணவர்களை அடுத்தகட்டமாக அரசு வேலைக்கு தேர்வாகும்படி தயார் செய்கிறார். இதை தடுக்கும் சமுத்திரக்கனியை எதிர்த்துப் போராடி தனது லட்சியத்தில் தனுஷ் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே வாத்தி படத்தின் மீதி கதை.

 

கல்வியின் முக்கியத்துவத்தை மிகவும் ஆழமாக கூறியிருக்கும் திரைப்படம். எக்காலகட்டத்திற்கும் ஏற்றார்போல் கல்வியின் தரம், அதைக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து மிக விரிவாகவும் சமகாலத்திற்கு ஏற்றார் போலவும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கும் இயக்குநர் அதை இன்னும் கூட சுவாரசியமாக கூறியிருக்கலாம். கல்வியை வியாபாரமாகப் பார்த்து கோடிகளில் லாபம் பார்க்கும் பணம் விழுங்கும் தனியார் முதலைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ள இயக்குநர் அதைப் படமாக காட்டாமல் பாடமாகக் கொடுத்துள்ளார். குறிப்பாக சாதி வித்தியாசங்களை உடைத்து மாணவர்களின் தரத்தை சமூகத்தில் உயர்த்துவது கல்வி மட்டுமே என்ற ஆழமான கருத்தை தெளிவாகக் கூறியுள்ள இயக்குநர் ஏனோ திரைக்கதையிலும், சுவாரசியமான காட்சி அமைப்புகளிலும் ஆங்காங்கே கோட்டை விட்டுள்ளது பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்துகிறது. 

 

படம் ஆரம்பித்த முதல் பாதி முழுவதும் சற்று ஸ்லோவாக நகர்ந்து இரண்டாம் பாதியில் சற்று வேகம் எடுத்த திரைப்படம் இறுதிக் காட்சிகளில் கனமான அழுத்தம் நிறைந்த காட்சிகளால் தப்பிப் பிழைத்துள்ளது. குறிப்பாக இம்மாதிரியான யூனிவர்சல் மெசேஜை ஒரு படமாக எடுக்கும் பட்சத்தில் வெறும் தெலுங்கு ரசனை உடன் மட்டுமே படத்தைக் கொடுத்திருப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏனோ சற்றுத் தள்ளி இருப்பது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட வாகை சூடவா, நண்பன் போன்ற படங்களின் கதைக் கருக்கள் இப்படத்தைப் போன்றே இருந்தாலும் அவை நிஜத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் அதேசமயம் சுவாரசியமான காட்சி அமைப்புகளால் மிகவும் ஈர்க்கப்பட்டது. அம்மாதிரியான சுவாரசியமான காட்சி அமைப்புகள் இப்படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தின் இறுதிக் கட்ட காட்சிகள் மிகவும் கனமான காட்சிகளாக அமைந்து மனதில் சற்றே தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் அவை படத்தை சற்றே கரை சேர்த்துள்ளது. இக்கால மிடில் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களை வெகுவாகச் சென்றடையும்படி இப்படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

 

தனுஷ் படத்துக்கு படம் மிகவும் ஷார்ப்பாகவும், அழகாகவும் மாறிக்கொண்டே வருகிறார். எப்போதும் போல் இவரது இயல்பான நடிப்பும்; எதார்த்தமான முக பாவனைகளும்; அந்த கதாபாத்திரமாகவே மாறும் இவரது இயல்பும்; கதைக்கும் கதை களத்திற்கும் மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறது. இவரது அசுரத்தனமான நடிப்பு படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஒரு நேரடி தெலுங்கு படத்தில் கால் பதிக்க நினைத்து எடுத்த முயற்சியில் கதைத் தேர்வு சரியாக இருந்து திரைக்கதையில் ஏனோ சற்றே தொய்வு இருப்பதை நடிகர் தனுஷ் இன்னும் கூட கவனமாகக் கையாண்டு இருக்கலாம். வழக்கமான கதாநாயகியாக வரும் சம்யுக்தா தனது வழக்கமான நடிப்பை காட்டி விட்டுச் சென்றிருக்கிறார். தனுஷ் உடன் சக ஆசிரியையாக நடித்திருக்கும் இவரின் சின்ன சின்ன முகபாவனைகளும், அழுத்தமான சில வசனக் காட்சிகளும் ஈர்க்கும்படி அமைந்து ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறார். இவருக்கும் தனுசுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. 

 

கல்வித் தந்தை, வில்லன் என இருமுகத் தோற்றத்தில் வரும் சமுத்திரகனி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது அமைதியான வில்லத்தனம் நிறைந்த நடிப்பு காட்சிகளுக்கும் கதாபாத்திரத்திற்கும் நன்றாக வலு சேர்த்திருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் தனுஷின் நண்பராக வரும் ஷாரா கவனம் பெறுகிறார். இவருடன் நடித்துள்ள தெலுங்கு நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஊர் பிரசிடெண்ட் ஆக வரும் சாய்குமார் ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி பிறகு நல்லவராக மாறி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தனுஷின் மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். அதேபோல் முக்கியமானவராக வரும் கென் கருணாஸ் தனக்கு கொடுத்த காட்சிகளில் வெகுவாக நடித்து அசுரனுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். மற்றபடி முக்கிய வேடங்களில் வரும் ஆடுகளம் நரேன் இன்னும் சில நடிகர்கள் அவரவர் வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.

 

ஜிவி. பிரகாஷ் குமார் இசையில் ‘வா வாத்தி’ பாடல் ரிப்பீட் மோட். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு பின்னணி இசை தேவையோ வழக்கம் போல் அவற்றை சிறப்பாகவும் தேவையுள்ள இடங்களில் தரமாகவும் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார். குறிப்பாகப் படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு தனது உயிர்ப்பூட்டும் பின்னணி இசை மூலம் வாழ்வு கொடுத்துள்ளார். படம் நடப்பது 1990களில் என்பதால் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெ. யுவராஜ். குறிப்பாகப் பள்ளி மற்றும் திரையரங்கம் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாகப் படமாக்கி உள்ளார்.

 

கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு சுவாரஸ்யமான படமாக காட்டாமல் பாடமாகக் காட்டி இருப்பது சற்றே ஆங்காங்கே அயற்சி ஏற்பட்டாலும் இக்கதையின் கருவும் படத்தில் காட்டப்பட்ட கருத்தும் இக்காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவதால் இப்பாடத்தை ஒரு முறை படிக்கலாம்.

 

வாத்தி - கருத்து ஊசி!

 

சார்ந்த செய்திகள்