Skip to main content

விஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்! மறைந்த தயாரிப்பாளர் சுவாமிநாதன்...

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

v swaminathan

 


பிரபல தயாரிப்பாளரும், காமெடி நடிகருமான வி. சுவாமிநாதன் கரோனா பாதிப்பால் இன்று காலமானார். 

 

தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். 1994ஆம் ஆண்டு அரண்மனை காவலன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கியது இந்நிறுவனம். இந்நிறுவத்தில் கே. முரளிதரன், ஜி. வேணுகோபால், வி. சுவாமிநாதன் என்று மூன்று பேர் தயாரிப்பாளர்களாக இருந்தனர். 

 

விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என்று 90-களின் முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து படம் தயாரித்துள்ள நிறுவனம் தற்போதைய முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகியோரை வைத்தும் தயாரித்துள்ளது. குறிப்பாக அஜித்திற்கு 'உன்னை தேடி', விஜய்க்கு 'பகவதி', சூர்யாவிற்கு 'உன்னை நினைத்து', தனுஷிற்கு 'புதுப்பேட்டை', சிம்புவிற்கு 'சிலம்பாட்டம்' உள்ளிட்ட படங்களைக் கொடுத்தது இந்நிறுவனம்தான். இயக்குனர் சுந்தர்.சி உடன் இணைந்து ஐந்து படங்களைத் தயாரித்துள்ளது லட்சுமி மூவி மேக்கர்ஸ். அதில் ஒரு படம்தான் பலரும் தற்போது கொண்டாடும் க்ளாசிக் படைப்பான 'அன்பே சிவம்' படமாகும்.

 

வி.சுவாமிநாதனுக்கு தயாரிப்பதில் மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வம் அதிகம், இவர்கள் தயாரித்த பல படங்களில் ஒரு சிறு வேடம் நடித்திருப்பார். கார்த்தியின் 'உன் இடத்தில் என்னை கொடுத்து' படத்தில் இவருடைய கதாபத்திரம் பலருக்கும் தெரியும். மிகவும் பிரபலம் என்றால், 'பகவதி' படத்தில் வடிவேலுடன் இணைந்து இவர் செய்த காமெடிதான். அதை இன்றும் பலரால் மறக்க முடியாதது. 

 

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் மொட்டை ராஜேந்தருக்கு மகனாக நடித்த பால் பாண்டி என்னும் அஸ்வின்தான் சுவாமிநாதனின் மகனாவார். லாக்டவுனில்தான் அஸ்வினுக்கு திருமணம் நடைபெற்றது. மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தை கடைசியாக இந்நிறுவனம் இயக்கியது. 

 

 

சார்ந்த செய்திகள்