Skip to main content

இளையராஜா வழக்கில் நீதிபதி விலகல்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ilaiyaraaja song copywright issue case

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்