Skip to main content

ரூ.1 கோடி நிதியுதவி அளித்த தனுஷ்

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
dhanush donates 1 crore to nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்கப் பொருளாளர் கார்த்தி 67ஆவது சங்க பொதுக்குழு கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் ஆகியோர் தலா ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினர். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாகவும் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. பின்பு நேற்று நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்ததாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 22 ஆம் தேதி சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. 

பின்பு புது சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாக, பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் சங்கத்தினர், பொதுமக்களிடம் சங்கம் தரப்பில் நிதி வசூலிக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சங்க தலைவர் நாசர் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகளை தொடங்கி, அதன் மூலம் சங்க கட்டடத்துக்கு பொதுமக்களிடமிருந்து மர்ம நபகர்கள் நிதி பெறுகிறார்கள் என  நடிகர் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

dhanush donates 1 crore to nadigar sangam building

இந்த நிலையில் தனுஷ், நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளைத் தொடர்வதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதற்கான காசோலையை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் வழங்கினார். 

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்